கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனம் ஓட்டக் கூடாது என தாய் கண்டித்ததால் மனமுடைந்த 7-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் எல்லைக்குட்பட்ட லட்சுமிபுரம் புதூர், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் முகில் (15). இவர் கோவில்பட்டியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சிறுவன் முகில் இருசக்கர வாகனம் ஓட்ட முயன்றபோது, அவரது தாய் மகேஸ்வரி சிறு வயதில் வாகனம் ஓட்டக் கூடாது எனச் சத்தம் போட்டு கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த முகில், வீட்டினரின் கோபத்துடன் வீட்டின் மாடிக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு தாயின் சேலையால் தூக்கிட்டுக் கொண்டார். தனது மகன் மாடியில் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மகேஸ்வரி, உடனடியாகப் பக்கத்து வீட்டினரின் உதவியுடன் சிறுவனை மீட்டு கோவில்பட்டி ஜெயஸ்ரீ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதனையடுத்துச் சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

