சாத்தூரில் இருந்து நாலாட்டின்புத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது தலைசுற்றி வீதி ஓரத்தில் இருந்த திண்டில் மோதி கீழே விழுந்ததில் 45 வயது நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்தவர் அழகர்சாமி என்பவரது மகன் குணசேகரன் (45). இவர் நேற்று தனது பைக்கில் சாத்தூரில் இருந்து நாலாட்டின்புத்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நாலாட்டின்புத்தூர் சர்வீஸ் சாலைக்கு திரும்பியபோது, குணசேகரனுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலை ஓரத்தில் இருந்த சிமெண்ட் திண்டில் பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட குணசேகரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நாலாட்டின்புத்தூர் காவல் நிலையப் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.