தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகேயுள்ள குளக்காட்டான் குறிச்சியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது 2 வயது பெண் குழந்தை சோனா ஸ்ரீ. நேற்று மாலை 6:30 மணியளவில் நடுக்காட்டூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் பொன்னுத்துரை (22), டாடா ஏசி வாகனத்தில் குடிநீர் விற்பனை செய்வதற்காகக் குளக்காட்டான் குறிச்சி தெருவிற்கு வந்துள்ளார்.

அப்போது சிறுமி சோனா ஸ்ரீயின் வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, குடிநீர் விநியோகம் செய்துவிட்டுப் பொன்னுத்துரை திரும்பியுள்ளார். அந்நேரத்தில், வாகனத்தின் முன் இடதுபுற சக்கரத்தின் அருகே சிறுமி சோனா ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்ததை கவனிக்காமல் ஓட்டுநர் திடீரென வாகனத்தை முன்னெடுத்துள்ளார்.

எதிர்பாராதவிதமாக வாகனத்தின் சக்கரம் சிறுமியின் தலையில் ஏறி இறங்கியதில், பலத்த காயமடைந்த குழந்தை சோனா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த புதூர் காவல் நிலையப் போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, வாகன ஓட்டுநர் பொன்னுத்துரையைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.