“தமிழர்களின் பண்பாட்டுப் பெருமை அவர்களின் தொன்மையில் மட்டுமல்ல, அந்தத் தொன்மையான கலை, பண்பாடு மற்றும் வாழ்வியல் மரபுகள் இன்றும் தொடர்வதில்தான் உள்ளது” எனத் திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.

திருநெல்வேலி மாவட்டம், பொருநை அருங்காட்சியகத்தில் 'சிந்துவெளி நாள் விழா' நூல்கள் மற்றும் ஆய்விதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. இப் பிரம்மாண்ட நிகழ்வில், பள்ளிக்கல்வி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு தொல்தடம்' ஆய்விதழ், 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' நூலின் பத்தாமாண்டு சிறப்புப் பதிப்பு, 'கொந்தகை (கீழடி) அறிவியல் ஆய்வு நூல்' 'Fort St. George' நூலின் மறுபதிப்பு ஆகிய நூல்களை வெளியிட்டார்:

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் (நாங்குநேரி), எஸ்.கே. கிறிஸ்டோபர் (இராதாபுரம்), சிந்துவெளி ஆய்வு மைய மதிப்புறு ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள் கா. ராஜன், வீணா முஷ்ரிப் மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: "பொருநை நாகரிகத்தின் சிறப்புகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்குள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள், 5D திரைப்படம், VR தொழில்நுட்பம் ஆகியவை பார்வையாளர்களை வரலாற்றுடன் நேரடியாக ஒன்றிணையச் செய்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் பாறை ஓவியங்களை வரைந்துள்ளான். அதேபோன்று குழந்தைகள் சுவரில் கிறுக்குவது, பொருட்களை உடைத்துப் பார்ப்பது போன்றவற்றை பெற்றோர் தடுக்காமல் அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க வேண்டும். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் போன்ற பாரம்பரியக் கலைப் பொருட்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்."

சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துப் பொறிப்புகள், தமிழர்கள் அன்றே எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியதை உணர்த்துகின்றன. மேலும், இரும்புத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான மிக அதிக வெப்பநிலையைப் பயன்படுத்தியதற்கான தொல்லியல் சான்றுகளும் தமிழர்களின் அறிவியல் அறிவை பறைசாற்றுகின்றன."

பொருநை அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் நினைவுப் பொருட்களை வாங்கிச் செல்ல 'சோவினீயர் ஷாப்' அமைக்கப்படும். மேலும், ஆய்வு மையம், உணவகம் மற்றும் மாணவர்கள் அமைதியாகப் படிப்பதற்கான வசதிகள் படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அரசு விழாக்களில் தொடர்ந்து வாய்ப்பளித்து அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்" எனத் தெரிவித்தார்.