தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா; இவர் நாகர்கோவிலில் வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகன் வெயில்முத்து (25), திருமணமாகாதவர்; தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை பார்த்து வந்தார். இக்குடும்பத்தினர் தற்போது தெற்கு சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர்.
வெயில்முத்து தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த அவர், நேற்று (நவம்பர் 28) இரவு 7 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கயத்தாறு காவல் ஆய்வாளர் சூர்யா மற்றும் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

