தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் 'பேம் டி.என்' (FaMeTN) நிறுவனம் சார்பில் 13-வது விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது.
குலசேகரப்பட்டினம் விண்வெளித் துறைமுகம், வ.உ.சி. துறைமுக விரிவாக்கம் மற்றும் முன்னணிப் பொதுத்துறை நிறுவனங்களின் இணைப்பு ஆகியவற்றின் மூலம் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டத் தொழில்முனைவோருக்கு இனி பொற்காலம் உருவாகி உள்ளதாக மாநிலக் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா தொடங்கி வைத்துச் சிறப்புரை பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வலுப்படுத்த இந்த நிதியாண்டில் (2026-27) ரூ.2,141 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க மூலதன மானியத் திட்டம் ரூ.352 கோடியிலிருந்து ரூ.600 கோடியாக (ரூ.248 கோடி கூடுதலாக) உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் இலக்கை நிர்ணயித்துள்ளது. பெருந்தொழில்களும் குறு, சிறு தொழில்களும் இணைந்தே இந்த சாதனையைச் சாத்தியமாக்க முடியும்.
சென்னை, கோவை, மதுரையில் நடைபெற்ற 12 விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வுகள் மூலம் 3,670 MSME நிறுவனங்கள் பயனைடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் 18 நிகழ்வுகளை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 13-வது நிகழ்வு தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
BHEL, வ.உ.சி. துறைமுகக் கழகம், கனநீர் தொழிற்சாலை, ஜிர்கோனியம் ஆலை, NTPL மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற முன்னணிப் பொதுத்துறை நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள விண்வெளித் துறைமுகம் மூலம் தூத்துக்குடி, கோவில்பட்டி, வள்ளியூர், கங்கைகொண்டான் மற்றும் விருதுநகர் தொழில்பேட்டை நிறுவனங்களுக்குப் புதிய ஆர்டர்களும் பிரம்மாண்ட வாய்ப்புகளும் கிடைக்கும், குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு பொற்காலமாக இயங்கும் என்றார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 120 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா, FaMeTN பொது மேலாளர் வெங்கடேசன், தொழில் வணிக ஆணைய அலுவலக இணை இயக்குநர்தீனதயாளன், தூத்துக்குடி மாவட்ட 'துடிசியா' தலைவர் தர்மராஜ், டான்சியா துணைத் தலைவர் கோடீஸ்வரன் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

