காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவிலில், ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு இன்று (நவம்பர் 3) உலகம்மன் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

காசி விசுவநாதப் பெருமானின் திருவருள் ஆணைப்படி உலகநாத பாண்டிய மன்னருக்கு மகளாகப் பிறந்து, லோகநாயகி குழல்வாய் மொழியம்மை என்று திருநாமம் பெற்ற உலகம்மனை இறைவன் மணம் முடித்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் இத்திருக்கோவில் திருக்கல்யாணத் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டிற்கான திருக்கல்யாணத் திருவிழா கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 9-ஆம் நாள் சிகர நிகழ்வாக இன்று காலையில் உலகம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது. தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, 'அரோகரா' பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு ரத வீதிகளையும் வலம் வந்த திருத்தேர் மாலையில் நிலையைச் சென்றடைந்தது.

விழாவின் 10-ஆம் நாளான நாளை (நவம்பர் 4) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 11-ஆம் திருநாளான வரும் நவம்பர் 5-ஆம் தேதி காலையில் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தபசு காட்சிக்காக எழுந்தருளும் நிகழ்வும், அன்று மாலை உலகம்மனுக்குக் காசி விசுவநாதர் தபசு காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து அன்று இரவு 9 மணிக்கு மேல் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு காசி விசுவநாதர் - உலகம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.