திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டு, த.வெ.க. அரசு அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்தியுள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக மகா தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதே தவிர, தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்துத் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: "ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்றத் தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாகச் செயல்படுத்தும்போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளைத் துச்சமாக நினைத்துத் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது த.வெ.க. அரசு.
நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதைச் சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் விஜய்யைச் சுற்றியுள்ளவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றைக் கட்டியிருப்பதாகத் தெரிகிறது.
இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் விஜய்க்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசனச் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த த.வெ.க. அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது" என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

