தூத்துக்குடி மாநகராட்சி 19-வது வார்டு மகிழ்ச்சிபுரம் மேற்குப் பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாயில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கித் துர்நாற்றம் வீசுவதாகவும், உடைந்த கான்கிரீட் பாலத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாயில் விழும் நிலை உள்ளதாகவும் பா.ஜ.க. மாவட்டத் துணைத் தலைவர் காளிராஜா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
மேலும் அந்த மனுவில், "19-வது வார்டு மகிழ்ச்சிபுரம் மேற்குப் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள மழைநீர் கால்வாயில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கித் துர்நாற்றம் வீசி வருவதாகவும், கால்வாயைக் கடந்து செல்வதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிறிய கான்கிரீட் பாலம் தற்போது உள்புறமாக உடைந்து கால்வாய்க்குள் விழுந்து விட்டதாகவும், இதனால் நீர் செல்ல வழியின்றித் தேங்கி நிற்பதுடன், இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவ்வப்போது கால்வாய்க்குள் விழும் தொடர் நிகழ்வு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தார் சாலைக்கும் மழைநீர் கால்வாய்க்கும் இடையே உள்ள மண்மேடுகள் தொடர்ந்து சரிந்து கால்வாய்க்குள் விழுவதால் நீரோட்டம் தடைபட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து புதிய கான்கிரீட் பாலம் அமைத்தும், மண்மேடுகளாக உள்ள பகுதிகளில் சிமெண்ட் கலவை அல்லது கான்கிரீட் அமைத்தும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இப்பிரச்சினை உடனடியாகச் சரிசெய்யப்படாவிட்டால், பா.ஜ.க. சார்பில் சம்பவ இடத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்கும் நிகழ்வில் மேற்கு மண்டலத் தலைவர் லிங்க செல்வம், மண்டலப் பொதுச் செயலாளர் இசக்கிதுரை, மாவட்டப் பொதுச் செயலாளர் ராஜேஷ், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் சக்திவேல், மேற்கு மண்டலச் செயலாளர் மகேஸ்வரி, விளையாட்டுப் பிரிவு மண்டலத் தலைவர் முத்துராஜ், அயலகப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சி.எம். மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

