தூத்துக்குடியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா கடந்த 10-ஆம் தேதி இரவு கொடி ஊர்வலத்துடனும், 11-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடனும் தொடங்கியது.
இதனை முன்னிட்டுத் தூத்துக்குடி வடபாகம் சந்தன மாரியம்மன், மட்டக்கடை உச்சினிமாகாளி அம்மன், மேலூர் பத்ரகாளி அம்மன், கீழ சண்முகபுரம் பத்ரகாளி அம்மன், மார்க்கெட் சந்தன மாரியம்மன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
விழா நாட்களில் தினசரி அம்மனுக்குக் காலை கும்ப பூஜை, கணபதி ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். மேலும், கோவில்களில் கொலு காட்சியும் சிறப்பாக அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
விழாவின் 10-வது நாளான இன்று இரவு அனைத்து கோவில்களிலும் அம்மன் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அனைத்து கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நரகாசுரனின் 7 தலைகள் வதைக்கப்பட்டு, இறுதியாக எருமைத் தலை வெட்டப்பட்டு அம்மனின் பாதத்தில் வைக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இவ்விழாவில் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும் பக்தர்களுக்குப் பானகாரம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 11 நாட்களாகத் தீவிர விரதம் இருந்த பக்தர்கள், பானகாரம் குடித்துத் தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்.

