தூத்துக்குடி மாநகரில் இன்று மாலை திடீரெனப் பயங்கர இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது நகரின் பல பகுதிகளில் பலத்த இடிச் சத்தம் கேட்டது. இந்நிலையில், தூத்துக்குடியின் புகழ்பெற்ற சின்னக் கோவில் என்று அழைக்கப்படும் மேற்றாசன ஆலயமான தூய இருதய ஆண்டவர் ஆலய கோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த இயேசுவின் சுரூபத்தின் மீது திடீரெனப் பயங்கரப் பேரிடி தாக்கியது.

இதில் அந்தத் திருவுருவச் சிலையின் இடது கரம் சேதமடைந்தது. நகரின் நடுப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலின் கோபுரத்தில் இடி தாக்கியபோதும், வேறு எந்தவித உயிரிழப்போ அல்லது பெருசேதமோ ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

இடி தாக்கிய உச்சிப் பகுதி சேதமடைந்தாலும், பெரிய பேராபத்துகளில் இருந்தும் பேரிடரிலிருந்தும் தூத்துக்குடி மக்களை இயேசுவின் திரு இருதயம் அற்புதமாகக் காப்பாற்றியுள்ளதாகக் கருதி, கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களிலும் வீடுகளிலும் இயேசுவிற்குத் தங்களது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்து உருக்கமான பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.