தூத்துக்குடி முள்ளக்காடு சாமி நகரைச் சேர்ந்தவர் பாண்டி மகன் பாண்டியராஜ் (35), லாரி டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த இசக்கியம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில நாட்களுக்கு முன்பு பிரிந்து விட்டார்களாம்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் பாண்டியராஜ் அந்தப் பெண்ணின் வீட்டு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்த முத்தையாபுரம் காவல் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையல், பாண்டியராஜன் உறவினர்கள் இசக்கியம்மாள் தான் ஆள் வைத்து அவரை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளதாகவும், எனவே இசக்கியம்மாள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

