தூத்துக்குடியில் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவித மழைநீர் பாதிப்பும் ஏற்படாமல் மழைநீர் முறையாக வெளியேற்றப்படுகிறது; அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மதன் ராஜா தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். எனவே, ஒவ்வொரு வருட மழை காலத்தின் போதும் பாதிக்கப்பட்ட மக்கள் அச்சமடைந்து வரும் நிலையில், விரைவில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தமிழக அரசு அந்தந்த மாவட்டங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கடந்த காலங்களில் அதிக அளவில் மழை வெள்ளநீர் தேங்கி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய ரஹமத் நகர், ஆதிபராசக்தி நகர், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையை எதிர்கொள்ளச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் மாநகராட்சிப் பொறியாளர்கள் வெள்ளநீர் வடிந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகால்கள் மற்றும் பம்பிங் மோட்டார்கள் குறித்து விளக்கமளித்தனர். அப்போது, மழைநீர் எந்தப் பகுதியிலும் தேங்கி மக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும், அதற்கு ஏற்பத் தேவையான கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மதன் ராஜா பேசியதாவது: "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான வசதிகள் மற்றும் அடிப்படை விஷயங்கள் என்னென்ன உள்ளன என்பது குறித்தும், தற்போது அது என்ன நிலையில் உள்ளது மற்றும் வேறு ஏதாவது கூடுதல் வசதிகள் தேவையா என்பது குறித்தும் ஆய்வு செய்துள்ளோம்.

தூத்துக்குடி மாநகரிலே 2023-ஆம் ஆண்டு 1.8 மீட்டர் அளவிற்குத் தண்ணீர் தேங்கியது; கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த அளவிற்கு மழை பெய்யவில்லை. இருப்பினும், வரக்கூடிய காலங்களில் அந்த அளவிற்கு மழைநீர் தேங்காத வகையில் மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கினால் உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளும், மக்களுக்குப் பாதுகாப்பான புகலிடங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவித மழைநீர் பாதிப்பும் ஏற்படாமல் மழைநீர் முறையாக வெளியேற்றப்படுகிறது; அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்படும்" என்றார்.