தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கலப்பின ஆண்டுத்தொகை மாதிரியின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள ரூ.11,733 கோடி மதிப்பிலான வெளித் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டத்தைக் கைப்பற்ற அதானி போர்ட்ஸ், மேகா இன்ஜினியரிங் மற்றும் விஸ்வ சமுத்ரா ஆகிய மூன்று முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
கலப்பின ஆண்டுத்தொகை மாதிரியின் (Hybrid Annuity Model - HAM) கீழ் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளியில் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் (Adani Ports), மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (MEIL) மற்றும் விஸ்வ சமுத்ரா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதை வ.உ.சி. துறைமுக ஆணைய (VOCPA) வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
துறைமுகத்தின் கடல்சார் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், சர்வதேச வர்த்தகம் மற்றும் கடல்வழி இணைப்பு வலையமைப்பில் தூத்துக்குடியின் நீண்டகால நிலையை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.17,167 கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த வெளித் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்த ஒட்டுமொத்த திட்டத்தில், ரூ.11,733 கோடி மதிப்பிலான துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் இரண்டு கட்டங்களாக ரூ.5,434 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள கொள்கலன் முனையம் ஆகியவை அடங்கும். துறைமுக ஆணையத்தின்படி, இந்தக் கொள்கலன் முனையம், வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, செயல்பாடு மற்றும் பரிமாற்றம் (DBFOT) மாதிரியின் கீழ் செயல்படுத்தப்படும்.
முன்னதாக இத்திட்டம் முழுமையாக DBFOT மாதிரியில் திட்டமிடப்பட்டிருந்தபோது, ஏலம் கேட்க நிறுவனங்கள் முன்வராத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் மூன்றாவது முறையாக ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டதுடன், சாலை உள்கட்டமைப்புத் துறையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படும் HAM முறைக்குத் துறைமுக ஆணையம் மாறியது.
இப்புதிய HAM முறையின் கீழ், கட்டுமானக் கட்டத்தின்போது மொத்தத் திட்டச் செலவில் 40 சதவீதத்தை மத்திய அரசும், மீதமுள்ள 60 சதவீதத்தை ஒப்பந்தம் பெறும் தனியார் கட்டுமான நிறுவனமும் முதலீடு செய்யும். இத்திட்டம் நிறைவேறும்போது வ.உ.சி. துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

