தூத்துக்குடியில் பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் திறந்து வைத்து, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக வெள்ளத் தடுப்பு பணிகளை பார்வையிட்டார்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (26.10.2026) பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்து, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக வெள்ளத் தடுப்பு பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, முன்னிலையில் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தங்கம்மாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாநில நிதி ஆணையத்தின் மானிய நிதியின் கீழ் ரூ.76.30 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடத்தினையும், அய்யன்கோவில் தெரு பகுதியில் CGF O & M மற்றும் DGF நிதியின் கீழ் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள எரிவாயு தகனமேடைக்கான கட்டடத்தினையும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.74 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக சீரமைக்கப்பட்டுள்ள கோக்கூர் குளத்தினையும், செயின்ட் மேரிஸ் காலணி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பூங்காவினை திறந்து வைத்தும்,
மேலும், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எப்.சி.ஐ குடோன் (டைமன்ட் காலனி) பகுதியில் O & M மற்றும் Deflict Grant Fund நிதியின் கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பக்கவாட்டு சுவர் மற்றும் பாலப் பணிகளையும், கந்தன் காலனி மற்றும் குரூஸ்புரம் பகுதியில் மாநில பேரிடர் தணிக்கை நிதியின் கீழ் ரூ.53.70 கோடி மதிப்பீட்டில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும், முத்தையாபுரம் நியாயவிலைக் கடையின் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் பக்கிள் ஓடை, எப்.சி.ஐ குடோன் போன்ற பகுதிகளை பார்வையிட்டு வருகிறோம். இப்பணிகளை சீரமைக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய அனைத்து பணிகளையும் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

