ஒடிசா மாநிலம், பட்டமுண்டாய் மாவட்டம், ஜம்முகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் ஹண்டிபந்து மகன் சந்தன் நாயக் (24). வடமாநிலத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் 2-வது கிழக்கு தெருவில் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள வின்ஃபாஸ்ட் கார் உற்பத்தி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு சந்தன் நாயக் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இரவு சுமார் 11:00 மணியளவில் அவர் தங்கியிருந்த வீட்டின் மாடியில் நின்று தனியாக போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது போதை மயக்கத்தில் நிலைதடுமாறிய அவர், மாடியிலிருந்து கீழே இருந்த கழிவுநீர் சாக்கடை வாய்க்காலில் விழுந்துள்ளார்.
இரவு 12:15 மணியளவில் வெளியில் சென்றுவிட்டு அறைக்குத் திரும்பிய சக தொழிலாளர்கள், சந்தன் நாயக் சாக்கடை வாய்க்காலில் பலத்த காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே சந்தன் நாயக் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த இரவு ரோந்து சிறப்பு உதவி ஆய்வாளர் வீரபெருமாள் நேரில் சென்று விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், அவர் போதையில் போன் பேசியபோது தவறி கீழே விழுந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

