தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமரச மையக் கட்டிடத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை 'தேசிய சமரச தீர்வு 3.0' முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமினை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுபாதேவி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கி இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பிற மாவட்ட நீதிபதிகள், தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / முதுநிலை உரிமையியல் நீதிபதி, சார்பு நீதிபதி, உரிமையியல் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு நேரடியாகத் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, சமரச தீர்வு மையத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், சமரச மைய வழக்கறிஞர்கள், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்கள், சட்டத் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.