தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை வெள்ளத் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் டி.சண்முகபுரம் ஊராட்சியில் உள்ள ஆத்திக்கிணறு குளம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கவர்நத்தம் ஊராட்சியில் உள்ள லக்கம்மாள் தேவி தெற்கு ஓடை, கன்னக்கட்டை குளம் மற்றும் ஓடை ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எப்போதும் வென்றான் அணைக்கட்டு, கல்லாறு பகுதி, குலசேகரநல்லூர் ஊராட்சியில் உள்ள ஓசனூத்து பெரிய ஓடை, கொம்பாடி ஓடை, எஸ்.கைலாசபுரம் ஓடை மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள உமரிக்கோட்டை ஓடை ஆகியவற்றைப் பார்வையிட்டு நீர்வரத்து மற்றும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் (பொ) உதய சங்கர், நீர்வளத்துறை (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) செயற்பொறியாளர் தங்கராஜன், உதவிப் பொறியாளர்கள் தங்கம், ஆனந்த், அஜித், எட்டையபுரம் வட்டாட்சியர் ஜெயலட்சுமி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார் மற்றும் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

