நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குடவரை கோவிலான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் ​விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். முக்கிய நிகழ்வான எட்டாம் திருவிழா முன்னிட்டு வரும் 15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

அன்று அதிகாலை சண்முகர் வெள்ளை சாத்தி எழுந்தருளலும், மாலை 4 மணிக்கு பச்சை சாத்தி எழுந்தருளலும் நடைபெற்று, இரவு 9 மணிக்கு மேல் திருவள்ளுவர் கலையரங்கத்திடலில் தாரகன் வதம் எனும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

​தொடர்ந்து (நவம்பர் 20) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பெருமாள் சன்னதி தெருவில் சுவாமி - அம்பாள் மாலை மாற்றும் காட்சியும், இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் திருக்கோவில் மண்டபத்தில் வைபவமான திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

முன்னதாக கொடி பட்டம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பால் தயிர் சந்தனம் விபூதி தேன் உள்ளிட்ட நவ திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.