ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அகழ்வாய்வு, தருவைகுளம் கடற்கரை சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (10.11.2026) மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு துறை திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட தருவைகுளம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 12 ஏக்கர் பரப்பளவில் 4,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.
தொடர்ந்து தருவைகுளம் சமண வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியர், அப்பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் கைரேகை பதிவேடுகளையும் சரிபார்த்தார்.
வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற ஆட்சியர் விஷு மகாஜன், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, சுற்றுலாத்துறை சார்பில் வெள்ளப்பட்டி மற்றும் தருவைகுளம் கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக நிலம் தேர்வு செய்யும் பணிகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஓட்டப்பிடாரம் வட்டம், பனையூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளப்பட்டி கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வாய்வுப் பகுதியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா. சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஐய்யனார், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா மற்றும் அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.

