இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி, அரசியல் களத்தில் குதித்து, பெரும்பான்மை இல்லா விட்டாலும், குதிரை பேரங்களின் வாயிலாக, முதல்வர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும், 'ரீல்ஸ்' காட்சிகளே கைகொடுக்கும் என, நம்பினார்.

எனவே, டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார். தெருத்தெருவாக போனார். எந்தவொரு இடைத்தேர்தலிலும், முதல்வர் பதவியில் இருப்பவர், இப்படி தெருத்தெருவாக போனது இல்லை.

வெற்றி பெற்றால் தான், தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு, நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்தார். தேர்தல் அறிவித்த பின், மகளிருக்கு கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அறிவித்தார்.

இப்படி பல்வேறு விதிமீறல்களை செய்தே, இந்த முடிவை த.வெ.க., பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரை, துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது; பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கி விட்டது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க., வேட்பாளர் சுகன்யாவை, கட்சித் தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி, உற்சாகப்படுத்தினார்.

தாராபுரம் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சுகன்யா, 57,370 ஓட்டுகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். கடந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் இந்திராணி 64,373 ஓட்டுகள் பெற்றிருந்தார்.

நேற்று ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சுகன்யாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஸ்டாலின் பேசினார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததற்கு சுகன்யா நன்றி தெரிவித்தார்.

அப்போது, தேர்தலில் போட்டியிடும் துணிச்சலையும், பிரசாரத்தில் அவர் காட்டிய உழைப்பையும் ஸ்டாலின் பாராட்டினார். மேலும், 57 ஆயிரம் பேர் தி.மு.க.,வுக்கு வாக்களித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.