நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (36). இவர் சவுண்ட் சர்வீஸ் அமைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்துச் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இசக்கியப்பனைக் கைது செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு வழங்கினார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், இசக்கியப்பனுக்குச் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனையும், 20,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக உஷா ஆஜராகி வாதாடினார்.

