உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு வேடங்கள் அணியும் பக்தர்கள் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதனால் குலசேகரன்பட்டினத்தில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இவ்வாண்டின் தசரா திருவிழா வரும் அக்டோபர் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் (மகிஷாசுரசம்கார விழா) அக்டோபர் 20-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது.
திருவிழா நாட்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், மாவட்ட மற்றும் போலிஸ் நிர்வாகம் சார்பில் 25 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பஸ் நிறுத்தங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இத்திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் காளி, முருகன், சிவன், பார்வதி, விநாயகர், கருப்பசாமி, விஷ்ணு, குறவன், குறத்தி, நர்ஸ், போலிஸ், திருடன் மற்றும் குரங்கு போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து விரதம் மேற்கொள்வர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்கு ஏற்ப 60 நாட்கள், 40 நாட்கள், 30 நாட்கள், 21 நாட்கள் மற்றும் 11 நாட்கள் என மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர்.
விரதக் காலத்தில் பல்வேறு ஊர்களுக்குச் சென்று காணிக்கை வசூலித்து, தசரா நாளன்று கோவில் உண்டியலில் செலுத்தி, வேடத்தைக் கலைத்து விரதத்தை நிறைவு செய்வர்.
காளி வேடம் அணியும் பக்தர்கள் ஏற்கனவே மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், பிற வேடங்கள் அணியும் பக்தர்கள் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து வருகின்றனர்.
நேற்று பஸ்கள், ரயில்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் குடும்பத்தினருடன் வந்த பக்தர்கள், கடலில் புனித நீராடி முத்தாரம்மனைத் தரிசித்து மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். இதனால் குலசேகரன்பட்டினம் வீதிகள், சிதம்பரேஸ்வரர் கடற்கரை மற்றும் கோவில் வளாகத்தில் இரவு வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

