இந்தியாவின் தலைசிறந்த உளவு முகவரான கார்த்தி, நாட்டுக்காக மிகப்பெரிய தியாகத்தைச் செய்து தேசத்துரோகி என்ற பட்டத்தைச் சுமக்கிறார். நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து வரும் சூழலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியுலகிற்குத் தனது முகத்தைக் காட்டுகிறார். தனது மகனுடன் இணைந்து அந்தச் சதியை முறியடிப்பதுடன் 'சர்தார்' முதல் பாகம் நிறைவடைந்த நிலையில், அங்கிருந்து தொடர்கிறது இரண்டாம் பாகத்தின் கதை.
ரகசிய உளவு முகவரான அச்யுத் குமாரை ராணுவ அதிகாரிகள் தேடி வரும் சூழலில், கார்த்தி அவரை நெருங்குகிறார். அப்போது அவரிடம் ஒரு சாவியைக் கொடுத்துவிட்டு அச்யுத் குமார் உயிரிழக்கிறார். அந்தச் சாவியின் பின்னணியை ஆராயத் தொடங்கும் கார்த்திக்கு, இதேபோல மேலும் 2 சாவிகள் உள்ளன என்றும், அந்தச் சாவிகளைக் கொண்டு பேரழிவை உண்டாக்கும் ஒரு அணுஆயுதத்தைத் திறக்க முடியும் என்ற அதிர்ச்சி உண்மையும் தெரியவருகிறது.
அதேவேளையில், இந்த அணுஆயுதத்தைத் தேடி நிழல் உலகக் கூலிப்படைத் தலைவனான எஸ்.ஜே.சூர்யா வருகிறார். 1981-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பேரிழிவை மீண்டும் செயல்படுத்தத் துடிக்கும் அவர், மனித குலத்தை அழிக்க நினைப்பது ஏன்? அவரது ஆபத்தான திட்டத்தைக் கார்த்தி முறியடித்தாரா, இல்லையா? என்பதே 'சர்தார் 2' படத்தின் பரபரப்பான மீதிக்கதை.
தந்தை, மகன் என இரு வேறு கதாபாத்திரங்களில் மாறுபட்ட நடிப்பைக் கொடுத்துக் கவனம் ஈர்த்துள்ளார் கார்த்தி. 'சர்தார்' ஆக எதிரிகளிடம் அவர் ஆடும் தாண்டவம் பரபரப்பின் உச்சம். அழகால் வசியப்படுத்தும் மாளவிகா மோகனன் ரகசிய ஏஜென்ட்டாக 'ஆக்ஷன்' மோடில் கலக்கியுள்ளார். ஆஷிகா ரங்கநாத்தின் அளவான நடிப்பும் ரசிக்க வைக்கிறது.
வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா தன் மிரட்டலான நடிப்பால் அசத்தியுள்ளார். சிரிப்பும் அழுகையும் கலந்து அவர் நடிக்கும் இடங்கள் 'அடடா' ரகம். மேலும் நாசர், அவினாஷ், பாபு ஆண்டனி, யோகி பாபு, நிழல்கள் ரவி ஆகியோர் படத்தின் ஓட்டத்திற்கு வலுசேர்த்துள்ளனர்.
ஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன. தனது 100-வது படம் என்பதால் சாம் சி.எஸ். இசையில் புகுந்து விளையாடியுள்ளார். நீளமான படம் என்றாலும், தேவையான காட்சிகளாகத் தொகுத்திருப்பதில் எடிட்டர் விஜய் வேலுக்குட்டியின் கவனம் ஈர்க்கிறது.
முதல் பாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளின் தீமையை எடுத்துரைத்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இந்த முறை 'ஆன்டிபயாடிக்' எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் பேராபத்தைச் சுட்டிக்காட்டிக் கவனம் ஈர்த்துள்ளார்.
கதாபாத்திரங்களின் நேர்த்தியான நடிப்பு படத்தின் பலமாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமான காட்சிகள் பெரிய அளவில் மனதோடு ஒன்றவில்லை. ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் லாஜிக் மீறல்களும், எளிதில் ஊகிக்கக்கூடிய காட்சிகளும் சிறு பலவீனம். இருப்பினும், ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர் படமாக 'சர்தார் 2' ரசிகர்களைக் கவர்கிறது.

