தனித்துவமான அடையாள அட்டையைப் பயன்படுத்தி, 40 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளும், தனியாகச் செல்ல இயலாதவர்களுக்கு உதவியாளர் ஒருவரும் தாழ்தளப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், டீலக்ஸ் மற்றும் புறநகர்ப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணை விவரம் வருமாறு:

முன்னதாக, 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறன்களில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்புத் தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர் ஒருவருக்கு, தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு இப்பயணத் திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையைப் (UDID Card) பயன்படுத்தி, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாகச் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் உதவியாளர் ஒருவர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தாழ்தளப் பேருந்துகள் (Floor-level buses), விரைவுப் பேருந்துகள், டீலக்ஸ், எல்.எஸ்.எஸ்., புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டணப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.