தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே முதலூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (43). இவரது 15 வயது மகளுக்கும், சாத்தான்குளம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் ஞானபிரகாஷ் என்பவருக்கும் இடையே இருந்த காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் ஞானபிரகாஷ் அடிக்கடி முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி இரவு முத்துக்கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்ற ஞானபிரகாஷ் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த அவர், தான் வைத்திருந்த அரிவாளால் முத்துக்கிருஷ்ணன், அவரது மனைவி மேரி விஜிலா (39) மற்றும் அவர்களது 12 வயது மகன் ஆகியோரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தலையில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுமியின் தந்தை, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைப் பலனின்றித் தந்தையும் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

இக்கொடூரத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், குற்றச் செயலில் ஈடுபட்ட ஞானபிரகாஷ் என்பவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரைச் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.