ஆந்திராவில் வீசிய ‘அர்னாப்’ புயல் காரணமாக நரசப்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06020) ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த ரயிலின் காலியாக உள்ள பெட்டிகளைத் (Empty Rake) தூத்துக்குடிக்குக் கொண்டு வரத் தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாகத் தெற்கு ரயில்வே முதன்மைப் போக்குவரத்து மேலாளர் அலுவலகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: "ரத்து செய்யப்பட்ட நரசப்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயிலின் (06020) காலியாக உள்ள ரயில் பெட்டிகள், கூடூர் சந்திப்பில் பெறப்பட்டு தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்படுகிறது.
இந்தக் காலி ரயில் பெட்டிகள் திருவொற்றியூர், சென்னை எழும்பூர், விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாகச் பிரதான தண்டுப்பாதை வழியே தூத்துக்குடி வந்தடையும். இந்த ரயில் இயக்கத்திற்கு உரிய முன்னுரிமை அளித்து, தேவையான பணிக்குழுவினரை மாற்றி அமைத்து விரைவாகத் தூத்துக்குடிக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி வந்தடைந்ததும், அங்குப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று அக்டோபர் 29-ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து மீண்டும் வழக்கமான சேவையைத் தொடங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

