நடுவானில் ஏற்பட்ட ஆபத்தான சூழலில் துரிதமாகச் செயல்பட்டுப் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் மற்றும் 'ஃப்ளை துபாய்' (Flydubai) விமான நிறுவனப் பணியாளர்களின் வீரதீரச் செயலைப் பாராட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

இவ்விருது வழங்கும் விழாவின் போது, அதிபர் ஷேக் முகமது அல் நஹ்யானுக்கும் இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், காயமடைந்துள்ள விமானி மச்சாரிடம் அதிபர், "நீங்கள் எப்போது குணமடைவீர்கள்?" என்று நலம் விசாரிக்கிறார். அதற்குப் பதிலளித்த விமானி மச்சார், "முழுமையாகக் குணமடைய இரண்டு மாதங்கள் ஆகும்" என்று கூறுகிறார்.

உடனே அதிபர் அல் நஹ்யான் நகைச்சுவையாகவும் அன்பாகவும், "எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. நீங்கள் முழுமையாகக் குணமடைந்ததும், உங்களுக்கு எப்படிச் சண்டையிடுவது என்று நான் போர் பயிற்சி அளிக்க விரும்புகிறேன்" எனக் கூறுகிறார். அதிபரின் இந்த அன்பான வார்த்தைகளுக்கு, "இதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்" என்று விமானி மச்சார் நெகிழ்ச்சியுடன் பதிலளித்தார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ:

மற்றொரு வீடியோவில், அதிபர் அல் நஹ்யான் விமானி ஸ்மித் மச்சாரைக் கட்டிப்பிடித்து, அவரது தலையில் போடப்பட்டுள்ள தையல்களை அன்போடு பார்வையிடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்திய விமானியின் இந்த வீரதீரச் செயலையும், யு.ஏ.இ. அதிபரின் எளிமையான நெகிழ்ச்சியூட்டும் அணுகுமுறையையும் பாராட்டி உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.