விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியைச் சேர்ந்தவர் துரைசாமி பாண்டியன் மகன் சரவணன் (40). இவர் பந்தல்குடியில் இருந்து மேலக்கரந்தை நோக்கித் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
மேலக்கரந்தை பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்திற்காகத் தற்காலிகச் சாலைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த சரவணன், சாலைப் பிரிவில் செல்லாமல் நேராகப் பாலம் கட்டும் பணிக்காகக் கொட்டப்பட்டிருந்த மணல் குவியலின் மீது அதிவேகமாக மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் சரவணனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து மாசார்பட்டி காவல் நிலையப் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

