கடந்த 2002-ஆம் ஆண்டு நாகர்கோவில் - சென்னை வழித்தடத்தில் வாரத்திற்கு நான்கு நாட்கள் இயங்கும் சிறப்பு ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்டது அனந்தபுரி எக்ஸ்பிரஸ். குமரி மாவட்ட பயணிகளிடையே இந்த ரயிலுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதை நிரந்தர ரயிலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்படி, அன்றைய ரயில்வே இணை அமைச்சராக இருந்த ராஜகோபால் முயற்சியால், இது 'திருவனந்தபுரம் - சென்னை' வழித்தடத்தில் 'அனந்தபுரி எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் நிரந்தர ரயிலாக அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
சுமார் 14 லட்சம் மக்கள் தொகை கொண்ட கல்குளம், திருவட்டார் மற்றும் விளவங்கோடு ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த பயணிகள் (பாறசாலை, குழித்துறை மற்றும் இரணியல் ரயில் நிலையங்களைச் சார்ந்தவர்கள்) தங்களது மாநிலத் தலைநகரான சென்னைக்குச் செல்ல இந்த ரயிலையே பெரிதும் சார்ந்துள்ளனர். அத்துடன், தமிழக எல்லைக்குள் அதிகபட்சமாக 765 கி.மீ தொலைவு பயணித்து, அதிகமான மக்களுக்குப் பயன்படும் ஒரே தினசரி ரயில் சேவையாகவும் இது விளங்குவது குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்டத்திலிருந்து புறப்படும் பெரும்பாலான ரயில்கள் நாகர்கோவிலிருந்து ஆரல்வாய்மொழி வழியாகத் திருநெல்வேலிக்குச் சென்றுவிடும். அல்லது கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு இரணியல், குழித்துறை வழியாகக் கேரளாவுக்குச் சென்றுவிடும். ஆனால், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மட்டுமே குமரி மாவட்டத்தின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களையும் மாநிலத் தலைநகரான சென்னையுடன் நேரடியாக இணைக்கிறது.
தற்போது, இந்த ரயில் இரு மார்க்கங்களிலும் பயணிக்கும் போது திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களில் 5 நிமிடங்களும்; நாகர்கோவில் டவுன் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் 3 நிமிடங்களும்; வள்ளியூரில் 2 நிமிடங்களும்; நெய்யாற்றின்கரை, பாறசாலை, இரணியல், ஆரல்வாய்மொழி, நாங்குநேரி ஆகிய நிலையங்களில் 1 நிமிடமும் நின்று செல்கிறது.
ஆனால், மறுமார்க்கமாகச் சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் செல்லும் போது, குழித்துறை ரயில் நிலையத்தில் மட்டும் நிற்கும் நேரம் 1 நிமிடமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவசர அவசரமாக இறங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, கடந்த மாதம் குழித்துறை ரயில் நிலையத்தில் இறங்க முயன்ற பெண் பயணி ஒருவர் தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை நோக்கிச் செல்லும் போது, அதிக பயணிகள் ஏறும் நிலையங்களில் திருவனந்தபுரத்திற்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் குழித்துறையும் (சில நாட்களில் திருநெல்வேலியும்), மூன்றாமிடத்தில் இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் ஆகிய நிலையங்களும் உள்ளன.
எனவே, பயணிகள் நடமாட்டத்தை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் கால அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
குழித்துறை மற்றும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் நேரத்தை 5 நிமிடங்களாக உயர்த்த வேண்டும். இரணியல் மற்றும் வள்ளியூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் நேரத்தை 3 நிமிடங்களாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

