திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா இன்று காலை கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மாா்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடா்ந்து, காலை 5.15 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து இன்று மாலை அப்பா் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவு ஸ்ரீபெலி நாயகா் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
செப். 4 ஆம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக் கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.
செப். 5 காலை கோ ரதம், இரவு வெள்ளி ரதம் வீதியுலா வருதல், செப். 6 அதிகாலை 5 மணிக்கு சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி, 9 மணிக்கு சுவாமி சண்முகப் பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்தை சேருதல், மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் வீதியுலா நடைபெறும்.
செப். 7 காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் சுவாமி வீதியுலா வந்து மேலக்கோயில் சேருதல், நண்பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியில் சுவாமி வீதியுலா வந்து கோயில் சேருதல், செப். 9 காலை 7 மணிக்கு தேரோட்டம் ஆகியவை நடைபெறுகின்றன.

