தூத்துக்குடி கடற்சார் ஆய்வுப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் 2026 கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் பி.எம்.சமங்க்கப் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில், டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை, அறிவியல் சாதனைகள் மற்றும் இலட்சியங்கள் ஆகியவை இளைஞர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்று குறிப்பிட்டுக் காட்டினார். மேலும், மாணவர்கள் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் தளர்ராத முயற்சியுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் ஜே. கங்காதேவி சிறப்புரையாற்றுகையில், டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைப் பயணம், அறிவியல் சாதனைகள், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தில் அடைய வேண்டிய இலக்குகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில், பி.எஃப்.எஸ்சி. இரண்டாம் ஆண்டு மாணவி எஸ். நெத்யா மற்றும் பி.எஃப்.எஸ்சி. முதல் ஆண்டு மாணவர் எம். ஜுநைது ஆகியோர் கலந்துகொண்டு, கலாம் அவர்களின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள் குறித்துத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அக்டோபர் 12 அன்று மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் மொழித்திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டு சிறப்பித்த மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் டி. எல்ஹசன் ஒருங்கிணைத்தார்.

