தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரத்தில், இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சார்பில் புதிய ஆதார் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய மையத்தைத் தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், இன்று (15.10.2026) நேரில் திறந்து வைத்து, அதன் செயல்பாடுகள் குறித்து UIDAI அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் சார் ஆட்சியர் தெரிவித்ததாவது: UIDAI நிறுவனத்தால் நேரடியாக இயக்கப்படும் இந்த ஆதார் சேவை மையம் (ASK), பாதுகாப்பான, தரநிலைப்படுத்தப்பட்ட மற்றும் உயர்தர சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தின் மூலம் பொதுமக்கள் ஆதார் பதிவு, மக்கள் தொகை விவரம் (Demographic) மற்றும் உயிர்வழி (Biometric) புதுப்பித்தல், பிழை திருத்தம் மற்றும் குறைதீர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும்.

இம்மையங்கள் அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர வாரத்தின் 7 நாட்களிலும் செயல்படும் என்பதால், பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நாட்களில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இம்மையம் 'மாடல்-சி' (Model-C) வகையைச் சேர்ந்தது ஆகும். இதில் 4 செயல்பாட்டு கிட்கள் (4 Operational Kits) மூலம் பொதுமக்களுக்கு ஆதார் சேவைகள் வழங்கப்படுகின்றன. குடியிருப்பாளர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வந்து சேவைகளைப் பெற முடியும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எளிதில் வந்து செல்லும் வகையில் சக்கர நாற்காலி அணுகுமுறை, அணுகலுக்கு ஏற்ற கழிப்பறை வசதிகள் மற்றும் தனிப்பட்ட குறைதீர் வசதி போன்ற அனைத்து அடிப்படை அம்சங்களும் செய்யப்பட்டுள்ளன.

இம்மையத்தில் ASK மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைகளைச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி, விரைவாகத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பார் என தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் UIDAI திட்ட அலுவலர் விஜய், தொகுதி மேலாளர் குணசேகரன், கிளை மேலாளர் ராஜகுரு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.