தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (அக். 15, 2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விளாத்திகுளம், சாத்தான்குளம், ஏரல், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
2025-26ஆம் ஆண்டிற்கான மிளகாயம், வெங்காயம், கொத்தமல்லி பயிர் வறட்சியால் பாதிக்கப்பட்டவற்றுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவது மற்றும் பயிர் காப்பீட்டு இணையதளத்தை மீண்டும் செயல்படுத்துவது.
சாத்தான்குளம் வட்டம், தச்சமொழி கிராமம் அல்லியார்குளம் நீர்வரத்து கால்வாய் மற்றும் கக்கன் நகர் மழைநீர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது.
தாமிரபரணி ஆற்றிலிருந்து வெள்ளக்காலங்களில் சடையநேரி கால்வாய்க்கு நீர் ஏற்றுவது, ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளம் பாசன கால்வாயைத் தூர்வாருவது மற்றும் பேய்க்குளம் முதல் பன்னம்பாறை வரையிலான குளத்துக் கால்வாயை மழைக் காலத்திற்கு முன் தூர்வாருவது.
விண்வெளி தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் கச்சாலைகளில் விதிமீறி தண்ணீர் எடுப்பதைத் தடுத்தல்.
நடப்பு பருவத்தில் டிஏபி உரம் மற்றும் தரமான விதைகள் தட்டுப்பாடின்றி கூட்டுறவு சங்கங்களில் கிடைக்கச் செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
விவசாயிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, விவசாயிகள் தரப்பிலிருந்து பெறப்பட்ட 103 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். முன்னதாக, வேளாண்மைத்துறை சார்பில் 'வறட்சி காலப்பயிர் மேலாண்மை 2026 – 2027'க்கான கையேட்டினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் தங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம், பயிற்சி துணை ஆட்சியர் மனோபார்கவி மற்றும் அரசு துறைசார்ந்த அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

