முன்வாசலை மூடிவிட்டு பின்வாசல் வழியாக மதுக்கடைகளைத் திறக்கும் இரட்டை வேட அரசியலைத் தவெக அரசு கைவிட வேண்டும் என்று பள்ளி மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள புதிய மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்றும் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு 717 மதுபானக் கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஒரு சில கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதி துப்பாஸ்பட்டி, வெள்ளப்பட்டி, அய்யனார்புரம் கிராமங்களுக்கான பேருந்து நிறுத்தம் அருகே புதிய மதுக்கடையுடன் மனமகிழ் மன்றங்களும் திறக்கப்பட்டுள்ளதாகத் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: "இதுதான் மதுக்கடைகளைக் குறைக்கும் லட்சணமா? முன்வாசலை மூடிவிட்டு பின்வாசலைத் திறப்பதுபோல, கடைகளை மூடிவிட்டு பின்னர் புதிதாக மதுக்கடைகளைத் திறந்து வருகிறது இரட்டை வேட தவெக அரசு. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட கடை மீண்டும் திறக்கப்பட்டது ஏன்? திறக்கச் சொன்னது யார்? அப்படியென்றால் மூடப்பட்ட 717 மதுபானக் கடைகளும் மாற்று இடங்களில் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டதா, மிஸ்டர் விஜய்?

பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்:

துப்பாஸ்பட்டி, வெள்ளப்பட்டி, அய்யனார்புரம் ஆகிய மூன்று கிராம மக்களுக்கும் பொதுவான பேருந்து நிலையம் இருக்குமிடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுவதால், பொதுவெளியில் மது அருந்துவது, இருதரப்பு மோதிக் கொள்வது போன்ற சம்பவங்களால் பொதுமக்களுக்கும், குறிப்பாகப் பள்ளி செல்லும் மாணவிகளுக்கும் பெரும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது.

இக்கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சர் பெருமக்களிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை கோரிக்கை விடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டு, எட்டு நாட்களுக்குள் கடை மூடப்படும் என உறுதி கூறப்பட்டது. ஆனால் எந்த உறுதியும் பின்பற்றப்படாமல், மறுநாளே பின்வாசல் வழியாக மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. நியாயமான கோரிக்கையுடன் போராடும் மக்களின் கோரிக்கைகளைக் கைகழுவிவிட்டு, அலட்சியமாகக் கையாளும் தவெக அரசு கடும் கண்டனத்திற்குரியது.

'Don’t Close The Tasmac மா... Atleast Open the Back Dooru' என்ற சினிமா பாடல் பாணியில் ரீல்ஸ் ஆட்சி நடத்திக் கொண்டு, 'பெண்களுக்குத் தாய்மாமனாக, அண்ணனாக, தம்பியாக இருப்பேன்' என வசனங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல், துப்பாஸ்பட்டி வெள்ளப்பட்டி அய்யனார்புரம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 10060 எண் கொண்ட மதுக்கடையை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்," என்று கீதா ஜீவன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.