தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் கடும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் சூழல் உருவாகியுள்ளதால் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சாத்தான்குளம் பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்யத் தொடங்கியது.
இன்று (வியாழக்கிழமை) காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் திடீரெனப் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தத் தொடர் மழையால், சாத்தான்குளத்தின் முக்கியச் சாலைகள் மற்றும் தாழ்வான பள்ளங்களில் மழைநீர் பெருகித் தேங்கி காணப்பட்டது.
கடந்த ஆண்டு போதிய மழை பொழியாததால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்திருந்தனர். தற்போது வடகிழக்குப் பருவமழை தொடக்கத்திலேயே சாத்தான்குளத்தில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால், இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு நல்ல மழை பொழியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், மாலை நேரத்தில் திடீரென மழை பெய்யத் தொடங்கியதால் சாத்தான்குளம் வாரச்சந்தை வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர்.

