சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட கோயில்கள் குறித்துப் பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க வரும் 25.11.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட கோயில்களைக் கண்டறிய, நீதிமன்ற உத்தரவுப்படி அரசினால் 06.10.2025 அன்று 5 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினால் பரிசீலிக்கப்பட்ட 34,971 திருக்கோயில்கள் தொடர்பான விவரங்கள், துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.hrce.tn.gov.in) கடந்த 25.08.2026 அன்று வெளியிடப்பட்டுப் பொதுமக்களின் கருத்துகள் கோரப்பட்டன.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட மனுவை (WP No. 30397/2026) விசாரித்து 23.10.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (05.11.2026) முதல் வரும் 25.11.2026 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் தங்களது கருத்துகள் அல்லது ஆட்சேபனைகளை வரும் 25.11.2026 மாலை 5.45 மணிக்குள் பின்வரும் முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது அறநிலையத்துறையின் இணையதளம் வாயிலாகவோ அனுப்பலாம்:
முகவரி:
ஆகமக் குழு,
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம்,
119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம்,
சென்னை - 600 034.
இத்தகவலைத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

