தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சார்லஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளியில், விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் 'விபத்தில்லா தீபாவளி' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பார்பரா ஜாக்லின் வரவேற்புரையாற்றினார். விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய ஆய்வாளர் சங்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளிடம் உரையாடினார்.
அப்போது அவர், பண்டிகைக் காலத்தில் பாதுகாப்பாகப் பட்டாசு வெடிக்கும் முறைகள், பட்டாசு வெடிக்க வேண்டிய பாதுகாப்பான இடங்கள், சரியான நேரம் மற்றும் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மாணவ-மாணவிகள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்குத் தீயணைப்பு வீரர்கள் விரிவாகப் பதிலளித்துச் செயல்முறை விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியர் முருகன் நன்றி உரையாற்றினார்.

