கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு 4 வார கால அவகாசம் அளித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய அரசாணையை ரத்து செய்ததற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசு விளக்க மனுத் தாக்கல் செய்ய 4 வார காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கித் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிரபாகரன், செல்வகுமார், அனந்தஜோதி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்திவாலா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, எதிர்மனுதாரர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்கத் தமிழக அரசுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

அப்போது நீதிபதிகள், "அரசின் நிலப்பாட்டில் மாற்றம் இல்லாதபோது விளக்கமனு தாக்கல் செய்ய எதற்காகக் கூடுதல் அவகாசம் கோருகிறீர்கள்?" என கேள்வி எழுப்பியதோடு, தமிழக அரசு விளக்க மனுத் தாக்கல் செய்ய 4 வார காலம் அவகாசம் வழங்கி, வழக்கை டிசம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.