சென்னை மாநகருக்குத் தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். சோழிங்கநல்லூரில் உள்ள குடிநீரேற்றும் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கம் அளித்தனர்.

இத்திட்டத்தின் வாயிலாக 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கடநீரைக் குடிநீராக்கும் 3 நிலையங்கள் மற்றும் பேரூரில் அமைக்கப்பட்டு வரும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் என மொத்தம் 9 சுத்திகரிப்பு நிலையங்கள் ஒன்றிணைக்கப்படும். 91.20 கி.மீ. நீளத்திற்கு சுற்றுக்குழாய்கள், 64.20 கி.மீ. நீளத்திற்கு குடிநீர் பரிமாற்றக் குழாய்கள் மற்றும் 2.65 கி.மீ. நீளத்திற்கு உந்து குழாய்கள் பதிப்படவுள்ளன. நவீன சென்சார் கருவிகள் மற்றும் தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டு அறை மூலமாகத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.

இதைத் தொடர்ந்து கார்ப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் மடுவை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் தெற்கு பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் நீர்வரத்து மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

cmvijayWater.jpg

பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாக அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்கவும், மீட்பு இயந்திரங்களைத் தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.