முதல் பாகத்தின் வெற்றிகரமான தொடர்ச்சியாக வந்துள்ள இப்படத்தில், டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதுடன், தியேட்டர்களில் திருவிழாக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகி வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகக் குடும்பத்துடன் கோவை தடாகம் பகுதியில் வசிக்கும் ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியனின் அடுத்த கட்டக் கதையை இப்படம் பேசுகிறது.
முதல் பாகத்தில் வர்மனைக் கொன்றவர்களைத் தேடும் கூட்டாளிகள் குழுவை நோக்கி ஜெயிலர் நகர்கிறார். முதல் பாதியில் நெல்சனின் தனித்துவமான நகைச்சுவை கலந்த காட்சிகளும், சூரஜ் மற்றும் யோகி பாபுவின் கூட்டணியும் படத்திற்கு வலு சேர்த்துள்ளன. பெரிய சண்டைக்காட்சிகள் இல்லாமலேயே தனது திரை ஆளுமையால் ரஜினி ரசிகர்களுக்கு மாஸ் அனுபவத்தைத் தருகிறார். அனிருத்தின் இசை படத்திற்குத் தேவையான எனர்ஜியைச் சரியாகக் கொடுத்துள்ளது.
இரண்டாம் பாதியில் கதைக்களம் வேறு இடத்திற்கு நகர்கிறது. எமோஷன்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றாலும், ரஜினியின் மிரட்டலான நடிப்பும், வித்யா பாலனின் கதாபாத்திரமும் படத்திற்குச் சிறப்பு சேர்க்கின்றன. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் போன்றோரின் கேமியோ தோற்றங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன.
ஒட்டுமொத்தமாக, 'ஜெயிலர் 2' திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மாஸான விருந்தாக அமைந்துள்ளதுடன், ஜெயிலர் யுனிவர்ஸ் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

