தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் நடைபெறும் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகளை இணையதளம் வழியாக நடத்துவதற்கான பண வரம்பை உயர்த்தி இந்து சமய அறநிலையத்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருக்கோயில்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், வருவாய் மற்றும் செலவினங்களுக்கான ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகள் ஆன்லைன் முறையில் இ-டெண்டர், இ-ஏலம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சத்திற்கு மேற்பட்ட வருவாய் இனங்கள் மற்றும் ரூ.2.5 லட்சத்திற்கு மேற்பட்ட செலவினங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் இணையதளம் வாயிலாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தற்போது கோவில் நிர்வாகப் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில் இந்த வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டு, கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. புதிய நடைமுறைகள்: பொது ஏலம் அல்லது ஒப்பந்தப்புள்ளி ஒரு ஆண்டிற்கான தொகை ரூ.15 லட்சத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இனி இ-டெண்டர் அல்லது இ-ஏலம் மூலம் நடத்தப்பட வேண்டும்.

செலவினங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி ஒரு ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில் இணையவழி ஒப்பந்தப்புள்ளி நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். வருமானம் ஈட்டக்கூடிய பிற இனங்களைப் பொறுத்தவரையில், கோயிலின் நிதி நிலப்பாட்டிற்கு ஏற்றவாறு இந்த ஆன்லைன் நடைமுறைகளைப் பயன்படுத்தலாம். மேலும், அரசு வெளியிட்டுள்ள திருத்திய அறிவிப்பு மற்றும் நிபந்தனைகளின் அடிப்படை கட்டமைப்பை மாற்றாமல் அனைத்துக் கோயில் நிர்வாகங்களும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினைத் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்துத் திருக்கோயில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்து உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.