இந்நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட சுகாதாரப் பேரவை மற்றும் மாவட்ட புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுக் குழு உறுப்பினருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வுக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் குருவெங்கட்ராஜ், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா ஆகியோர் கலந்துகொண்டு, மது மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேடுகள் குறித்தும் மாணவ - மாணவிகளிடையே விளக்கிப் பேசினர்.
தொடர்ந்து, மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ். பானுமதி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வாசிக்க, காமராஜ் கல்லூரி மாணவ - மாணவிகள் திரளாகப் பங்கேற்றுப் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
"மாணவர்களாகிய நாங்கள் எவ்வித போதைப்பொருட்களையும், புகையிலைப் பொருட்களையும், மதுபானங்களையும் வாழ்நாளில் தொட மாட்டோம். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தைப் போதைப் பழக்கத்திலிருந்து மீட்க விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். போதை இல்லாத தூத்துக்குடியையும், புகையிலையில்லா தமிழ்நாட்டையும் உருவாக்குவதே எங்கள் எதிர்கால லட்சியம்!" என மாணவ - மாணவிகள் உணர்ச்சிப்பூர்வமாகச் சூளுரைத்தனர்.

முன்னதாக, மதர் சமூக சேவை நிறுவன துணைத் தலைவர் சுதாகர் வரவேற்றார். காமராஜ் கல்லூரி முதல்வர் பானுமதி வாழ்த்துரையாற்றினார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை மருத்துவ அலுவலர் மருத்துவர் பி. இனிகோ மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவு சமூகப் பணியாளர் வ. ரொசாரி பாத்திமா ஆகியோர் ஒலி-ஒளி படக்காட்சிகள் மூலம் போதைப் பழக்கத்தால் வரும் நோய்கள், அவற்றுக்கான மருத்துவச் சிகிச்சைகள் குறித்து விளக்கமளித்தனர்.
நிறைவாக மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ். பானுமதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் மா. அய்யனுராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பா. ஆனந்த், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் திரளான மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர்.

