நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ‘பி’ காலனி டிரைவர் காலணியைச் சேர்ந்தவர் வள்ளிசெல்வம் (45). இவர் பெருமாள்புரம் பகுதியில் மகளிர் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில், இந்த விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் சுற்றுச்சுவர் ஏறி குதித்து வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அங்குள்ள கொடியில் பெண்கள் காயப்போட்டிருந்த உள்ளாடைகளைத் திருடிய அந்த நபர், அவற்றை ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு மீண்டும் சுவரேறி குதித்து வெளியே வந்துள்ளார். பின்னர், வெளியே நிறுத்தியிருந்த தனது மோட்டார் சைக்கிளில் ஏறி அப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து விடுதி வார்டன் கோபிஷா அளித்த தகவலின் பேரில், விடுதி உரிமையாளர் வள்ளிசெல்வம் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் கார்த்திகைகுமார் வழக்குப் பதிவு செய்து, அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இத் திருட்டில் ஈடுபட்டது நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த மீன்கடை தொழிலாளி தமீமுல் அன்சாரி (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

கைதான தமீமுல் அன்சாரி மீன்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மற்ற நேரங்களில் இயல்பாகக் காணப்படும் இவர், பெண்களின் ஆடைகளைக் கண்டால் அதைத் திருடும் மனநிலை கொண்டவர் என்பது தெரியவந்தது. இதேபோன்று மேலப்பாளையம் பகுதியிலும் பெண்களின் ஆடைகளை இவர் திருடியுள்ளார்.

இதுவரை 3 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ள இவர், மகளிர் விடுதிகளில் திருடிய உடைகள் அனைத்தையும் தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. வீட்டிலிருந்த துணிகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இச் சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.