நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 47 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, இரு மாவட்டங்களிலும் காய்ச்சல் தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்குச் சிகிச்சை அளிக்க 50 படுக்கைகள் மற்றும் நவீன மருத்துவ வசதிகளுடன் 2 தனி வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இங்குச் சிகிச்சைக்கு வந்தவர்களைப் பரிசோதனை செய்ததில், 2 குழந்தைகள் உட்பட 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசியில் 40 பேர் உள்நோயாளிகளாக அனுமதி:
இதேபோல், தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி நகரம், சங்கரன்கோவில், ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பரவல் காணப்படுகிறது.
இப்பகுதிகளில் சுமார் 300 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்த நிலையில், 260 பேர் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது சுமார் 40 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகாதாரத் துறை அறிவுறுத்தல்:
நெல்லை, தென்காசி மாவட்ட அரசு பொது மருத்துவமனைகள், நகர் நல மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலால் வருபவர்களுக்கு உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுச் சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
வைரஸ் காய்ச்சல் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளதால், காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், உரிய மருத்துவச் சிகிச்சை பெறவும், முகக்கவசம் அணியவும் சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

