கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், 133 அடி உயர திருக்குறள் சிலையையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாகத் தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகப் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி இந்தப் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா கடந்த 11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் திருவிழாவான வரும் 20-ம் தேதி நண்பகல் 12 மணிக்குப் பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கிப் பரிவேட்டைக்காக ஊர்வலமாகப் புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனை ஒட்டி இந்தப் பரிவேட்டை திருவிழாவில் சுற்றுலா பயணிகள், விவேகானந்த கேந்திரா மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஊழியர்களும், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்களும் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்று நண்பகல் 12 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்திற்குப் படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது என்று கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

