கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த பல்வேறு ரயில் சேவைகள் கடந்த சில ஆண்டுகளாகப் பகுதியளவிலும், முழுமையாகவும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இதனால் குமரி மாவட்ட ரயில் பயணிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். ரயில்வே நிர்வாகத்தின் இத்தகைய முடிவுகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் உரிய கேள்விகளை எழுப்பி, பயணிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், சில நேரங்களில் ரயில்வே நிர்வாகத்தின் முடிவுகளுக்கு ஆதரவான நிலைப்பாடுகள் எடுக்கப்படுவது பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்திலிருந்து ரத்து செய்யப்பட்ட மற்றும் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் கொண்டுவர வேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

நாகர்கோவில் – மங்களூரு ஏரநாடு எக்ஸ்பிரஸ்:

நாகர்கோவிலிலிருந்து மங்களூரு வரை இயக்கப்பட்டு வந்த ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயில், தற்போது நாகர்கோவிலுக்கு வராமல் திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டப் பயணிகள் மங்களூரு மற்றும் கேரளாவின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் நேரடி ரயில் சேவையை இழந்துள்ளனர். இந்த ரயிலை மீண்டும் நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்குவதற்காக, அதன் கால அட்டவணையில் தேவையான மாற்றங்களைச் செய்யலாம். நாகர்கோவிலிலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10 மணிக்குள் மீண்டும் நாகர்கோவிலை வந்தடையும் வகையில் கால அட்டவணையை அமைத்தால், குமரி மாவட்டப் பயணிகள் அதிகாலையிலேயே புறப்பட்டு எர்ணாகுளம் உள்ளிட்ட கேரளாவின் முக்கிய நகரங்களுக்குச் சென்று அன்றே திரும்புவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கன்னியாகுமரி – மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட முக்கியமான ரயில் சேவைகளில் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் தற்போது மும்பை வரை செல்லாமல் புனே நகரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரணியல், குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றின்கரை உள்ளிட்ட ரயில் நிலையங்களைச் சேர்ந்த பயணிகள் மும்பைக்கான நேரடி ரயில் சேவையை இழந்துள்ளனர்.

இதற்கு மாற்றாக, நாகர்கோவில் – மும்பை ரயிலைத் திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) வரை நீட்டித்து இயக்கலாம். மேலும், திருவனந்தபுரம் – இரணியல் வழித்தடம் ஒருவழிப் பாதையாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி – புனே ஜெயந்தி ஜனதா ரயிலைத் திருவனந்தபுரத்துடன் நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாகத் திருவனந்தபுரம் – மும்பை நெத்ராவதி எக்ஸ்பிரஸ் (Netravati Express) ரயிலை நாகர்கோவில் வழியாகக் கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்பதும் பயணிகளின் கோரிக்கையாகும்.

ரத்து செய்யப்பட்ட கன்னியாகுமரி – தூத்துக்குடி பயணிகள் ரயில்:

1999-ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி வழியாகக் கன்னியாகுமரிக்குப் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகப் பேருந்தில் தூத்துக்குடிக்குச் செல்வதுடன் ஒப்பிடும்போது, ரயில் பயணம் நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டது.

இதற்குக் காரணம், அப்போதைய ரயில் சேவை நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி வழியாகச் சுற்றுப்பாதையில் இயக்கப்பட்டதுடன், ஒருவழிப் பாதையிலும் இயங்கியது. மேலும், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ரயிலின் இன்ஜினை மாற்றுவதற்கு 15 முதல் 30 நிமிடங்கள் வரை காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் பயணிகளின் ஆதரவு குறைந்து, பின்னர் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. நாகர்கோவில் டவுன் முதல் தூத்துக்குடி வரையிலான ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இன்ஜினை மாற்ற வேண்டிய அவசியமின்றிப் பயணிக்க உதவும் பைபாஸ் ரயில் பாதையும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

எனவே, திருவனந்தபுரம் வடக்கிலிருந்து காலையில் புறப்பட்டு நாகர்கோவில் வரும் பயணிகள் ரயிலையும், மாலையில் நாகர்கோவிலிலிருந்து புறப்படும் மறுமார்க்க ரயிலையும் தூத்துக்குடி வரை நீட்டித்து, திருவனந்தபுரம் வடக்கு – நாகர்கோவில் – தூத்துக்குடி இடையே இயக்க வேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நிறுத்தப்பட்ட திருநெல்வேலி – திருவனந்தபுரம் பயணிகள் ரயில்:

திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாகத் திருவனந்தபுரம் செல்லும் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, 08.04.1981 அன்று பயன்பாட்டிற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, 1983-ம் ஆண்டு திருநெல்வேலியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் பின்னர் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட இந்தப் பயணிகள் ரயிலை மீண்டும் பழைய கால அட்டவணையின்படி இயக்கினால், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டப் பயணிகள் திருவனந்தபுரத்திற்குச் சென்று, அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் நெடுந்தூர ரயில்களை எளிதாகப் பிடிக்க முடியும். எனவே, இந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது பயணிகளின் முக்கியக் கோரிக்கையாகும்.

நாகர்கோவில் – மும்பை ரயிலின் வழித்தட மாற்றம் மற்றும் பெங்களூரு இணைப்பு ரத்து:

நாகர்கோவிலிலிருந்து மதுரை, சேலம், பங்காரப்பேட்டை, பெங்களூரு (கிருஷ்ணராஜபுரம்) வழியாக மும்பைக்குச் வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்பட்டு வந்த ரயில், பின்னர் பெங்களூரு வழித்தடத்தைத் தவிர்த்து, காட்பாடி, திருப்பதி, பாகாலா, குண்டக்கல் வழியாக இயக்கப்படும் வகையில் மாற்றப்பட்டது. இதனால் குமரி மாவட்டப் பயணிகள் பெங்களூருக்கான நேரடி பகல்நேர ரயில் இணைப்பை இழந்தனர். இதற்கு மாற்றாக, யஷ்வந்த்பூர் – ஷிமோகா ஜனசதாப்தி ரயிலை நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாகர்கோவில் - திருப்பதி:

தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளும் பக்தர்களும் திருப்பதி செல்வதற்காக, 2000-ஆம் ஆண்டு ரயில்வே வரவு செலவுத் திட்டத்தில் (ரயில் பட்ஜெட்டில்) நாகர்கோவில் - திருப்பதி இடையே வாரத்திற்கு இரண்டு நாள் இயங்கும் ரயில் அறிவிக்கப்பட்டு, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி வரை பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது.

பின்னர் இந்த ரயில் திருப்பதி – மும்பை ரயிலுடன் இணைக்கப்பட்டு, நாகர்கோவில் - திருப்பதி மற்றும் திருப்பதி - மும்பை என இரு பிரிவுகளாக இயக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவ்விரு ரயில்களையும் ஒன்று சேர்த்து 'நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ்' என்ற ஒரே ரயிலாக இயக்கப்பட்டது.

ஆனால், 2013-ஆம் ஆண்டு ரயில் கால அட்டவணையில், நாகர்கோவிலிருந்து திருப்பதி வழியாகச் சென்று கொண்டிருந்த இந்த வாராந்திர இரு நாள் ரயில், திருப்பதிக்குச் செல்லாமல் ரேணிகுண்டா வழியாகத் திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2013 செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இன்று வரை இந்த ரயில் திருப்பதிக்குச் செல்லாமலேயே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், எந்த நோக்கத்திற்காக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் உள்ளது.

எனவே, 17261/17262 குண்டூர் - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் ரயிலை திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் சமீபத்தில் நடைமேடை விரிவாக்கப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், இந்த நீட்டிப்பிற்கு கன்னியாகுமரியில் கூடுதல் பராமரிப்பு உள்கட்டமைப்பு தேவைப்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாகர்கோவில் – பெங்களூரு வாரவிடுமுறை ரயில்:

நாகர்கோவில் – பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் (16538/16537), 2010-ம் ஆண்டு முதல் மதுரை, ஈரோடு வழியாக இயக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் நாமக்கல் வழியாகப் புதிய தினசரி ரயில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வாராந்திர ரயில் சேவை நிறுத்தப்பட்டது. வார இறுதி நாட்களில் பெங்களூரிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் தென் மாவட்டங்களிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் பயணிகளுக்கும் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் எனப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

கன்னியாகுமரி – ஹைதராபாத் நேரடி ரயில் சேவை:

1990-களில் கன்னியாகுமரியிலிருந்து மும்பை வரை இயக்கப்பட்ட ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலில், ஹைதராபாத் செல்லும் பயணிகளுக்காகப் பிரத்யேகப் பெட்டி (Slip Coach) இணைக்கப்பட்டு வந்தது. இந்தப் பெட்டி வாடி (Wadi) ரயில் நிலையத்தில் பிரிக்கப்பட்டு, ஹைதராபாத் செல்லும் ரயிலுடன் இணைக்கப்பட்டதால், குமரி மாவட்டப் பயணிகள் நேரடியாக ஹைதராபாத் செல்லும் வசதியைப் பெற்றிருந்தனர். பின்னர், இந்தப் பெட்டி இணைக்கும் நடைமுறை ரயில்வே நிர்வாகத்தால் கைவிடப்பட்டதால், குமரி மாவட்ட மக்கள் ஹைதராபாத்திற்கான நேரடி ரயில் சேவையை இழந்தனர். தற்போது நாகர்கோவிலருந்து ஹைதராபாத் இயக்கப்படும் வாராந்திர ரயில்கள் நீண்ட சுற்றுப்பாதைகளில் இயக்கப்படுவதால் பயண நேரம் அதிகமாகிறது. இதற்கு மாற்றாக, எலஹங்கா – காச்சிகுடா தினசரி ரயிலை கிருஷ்ணராஜபுரம், சேலம், மதுரை, திருநெல்வேலி வழியாகக் கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்பதே தென்மாவட்டப் பயணிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட வேண்டும்!

கன்னியாகுமரி மாவட்டம் நாட்டின் முக்கியமான சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில், ஏற்கெனவே இருந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதும், வழித்தடங்கள் மாற்றப்படுவதும் மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதியைப் பாதிக்கிறது.

எனவே, ரயில்வே நிர்வாகம் பயணிகளின் உண்மையான தேவைகளையும், தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகளையும் கருத்தில் கொண்டு, ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கவும், வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்களைப் பழைய வழித்தடத்தில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரி மாவட்ட மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் உரிய முக்கியத்துவம் அளித்து, ரயில்வே அமைச்சகம் மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்பதே கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.