தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில், தமிழ் செம்மல் விருது பெற்ற மோ. அன்பழகனுக்குப் பாராட்டு விழாவும், மாவட்ட ஆட்சித்தலைவருக்குத் தீபாவளி வாழ்த்துக் கடிதம் எழுதும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குச் சுகாதாரப் பள்ளித் தலைமை ஆசிரியர் கனகரத்தின மணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.
பள்ளியின் சார்பில் தலைமையாசிரியை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழ் செம்மல் விருது பெற்ற மோ. அன்பழகன் அவர்களுக்குப் பள்ளியின் சார்பில் பொன்னாடை அணிவித்துச் சிறப்பான முறையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைக் கவிஞர் செல்வராஜ், விருது பெற்ற அன்பழகனைப் பாராட்டி வாழ்த்துக் கவிதையை வாசித்தார். தொடர்ந்து, பத்திரிகையாளர் மன்றத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வின் தொடர்ச்சியாக, பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்குத் தங்கள் கரங்களால் தீபாவளி வாழ்த்துக் கடிதங்களை உற்சாகமாக எழுதினர்.
இவ்விழாவை விளையாட்டு ஆசிரியர் ஜீசஸ் ஆல்பன் திறம்படத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாகத் தூத்துக்குடி மாவட்டப் புத்தக வாசிப்பு மன்றத் தலைவரும் எழுத்தாளருமான ஆ. மாரிமுத்து நன்றியுரை ஆற்றினார்.
விழாவில் திரளான ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்டப் புத்தக வாசிப்பு மன்றத்தினர் செய்திருந்தனர்.

