தூத்துக்குடி மாநகராட்சிக் சாதாரணக் கூட்டம், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி: "தூத்துக்குடி மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பக்கிள் ஓடை மற்றும் முக்கிய மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளன. நகரில் சீரான குடிநீர் தினமும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்; இதர தேவைகளுக்கு போர்வெல் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நகரில் தெருநாய்கள் தொல்லை குறித்து பொதுமக்கள் 9443204030 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். தெருநாய்களைக் கட்டுப்படுத்தத் தடுப்பூசி மையம் அமைக்கப்படும். மேலும், மழைக்காலச் சுகாதாரப் பணிகளுக்காகக் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நிலவேம்புக் கஷாய விநியோகம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் கனகராஜ், புதிய குடிநீர் இணைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டி, குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, "குடிநீர் விண்ணப்பங்கள் தொடர்பான மென்பொருள் சேவையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றதால் ஒரு வாரம் மட்டுமே விண்ணப்பப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மற்றபடி மாநகராட்சியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை" எனத் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து பேசிய மேயர், மாநகராட்சியில் உள்ள 40 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மீதமுள்ள வார்டுகளிலும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

counsellorstuty.jpg

இக்கூட்டத்தில் பேசிய பல கவுன்சிலர்கள், மக்கள் பிரதிநிதிகளான தங்களைக் கலந்தாலோசிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இறுதியாக, புதிய சாலைப் பணிகள் உட்பட 36 முக்கியத் தீர்மானங்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.