கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி, தனது தோழியுடன் பேருந்திற்காகக் காத்திருந்துள்ளார். அப்போது தக்கலை மருந்துகோட்டை பகுதியைச் சேர்ந்த த.வெ.க. மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர் அந்த வழியாகக் காரில் வந்துள்ளார்.
மாணவியின் தோழிக்கு ஏற்கனவே கிறிஸ்டோபர் அறிமுகம் என்பதால், இருவரையும் ஊரில் கொண்டு விடுவதாகக் கூறித் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். முதலில் மாணவியின் தோழி இறங்கிவிட்ட நிலையில், மாணவியை மட்டும் காரில் தொடர்ந்து அழைத்துச் சென்றுள்ளார். வழியில் காரை நிறுத்திய கிறிஸ்டோபர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறியவாறு காரில் இருந்து குதிக்க முயன்றதை அடுத்து, அவரை வழியிலேயே காரில் இருந்து கீழே இறக்கிவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்துத் தக்கலை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கிறிஸ்டோபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த கிறிஸ்டோபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வரும் நவம்பர் 12-ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

